Skip to main content

தயாநிதி மாறன் எம்.பி. தொடர்ந்த வழக்கு; எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் ஆஜர்!

Published on 26/08/2024 | Edited on 26/08/2024
Dayanidhi Maran MP Proceedings Edappadi Palaniswami will appear in person tomorrow

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தைச் செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நாளை (27.08.2024) நேரில் ஆஜராகிறார். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த மே மாதம் 14ஆம் தேதி (14.05.2024) எழும்பூர் 13வது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்