Skip to main content

நீதிமன்றம் சொல்லியும் கேட்காத மருமகள்; வெளியேற்றப்பட்ட மூதாட்டி

Published on 19/12/2022 | Edited on 19/12/2022

 

daughter-in-law sent mother-in-law out house defiance court order

 

ஓய்வு பெற்ற வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் என்பவரது மனைவி சரோஜா (வயது 78) தனது மூத்த மகன் செந்தில்குமார் என்பவருக்குத் தனது வீட்டை தான செட்டில்மென்ட் எழுதி வைத்தார். அதனை அவர் தனது 2-ஆவது மனைவி ஸ்ரீ தேவி என்பவருக்கு தான செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்துவிட்டார். இருப்பினும் அதே வீட்டில் முதல் மனைவியின் மகன் சியாம் பாலாஜி தனது தாயார் சரோஜா, 2 ஆவது மனைவி ஸ்ரீ தேவி ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.

 

கடந்த மாதம் 22 ஆம் தேதி பேரன் சியாம் பாலாஜி சாலை விபத்தில் மரணமடைந்தார். இந்த அதிர்ச்சி தாங்காது மகன் செந்தில்குமார் 25 ஆம் தேதி மரணமடைந்தார். இருவருக்கும் கடந்த மாதம் 8 ஆம் தேதி நீத்தார் சடங்குகள் முடிந்தவுடன், மருமகள் ஸ்ரீ தேவி மாமியார் சரோஜாவின் துணிமணி மற்றும் பொருட்களை வெளியே தூக்கிப் போட்டு அவரை வீட்டை விட்டுத் துரத்தியுள்ளார். 

 

இதனால் சரோஜா திருச்சி கூடுதல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் முதிய பெண்மணி சரோஜா அதே வீட்டில் குடியிருக்கவேண்டும் என்றும், அதனை மருமகள் தடை செய்யக்கூடாது என்றும் கண்டோன்மென்ட் காவல் ஆய்வாளர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், 16 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுடனும் காவல்துறையுடனும் சென்ற முதிய பெண்மணி சரோஜாவை மருமகள் ஸ்ரீ தேவி அனுமதிக்க மறுத்து மீண்டும் வெளியே அனுப்பி இருக்கிறார். 

 

இதனால் வேறுவழியின்றி தனது வீட்டிற்குள் ( பொன்னகர் திண்டுக்கல் சாலை உதயம் சூப்பர் மார்க்கெட் அருகில்)  அனுமதிக்க வேண்டியும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தலையிட்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டி மூதாட்டி சரோஜா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்