Skip to main content

மக்களையும், சட்டத்தையும் ஏமாற்றும் அரசின் மறுமதிப்பீட்டுக்குழு.

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2018 – 2020 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில், உறுப்பினர்களான எம்.எல்.ஏக்கள் சி.வி. ராஜேந்திரன், இ. கருணாநிதி, வி. எஸ். காளிமுத்து, அ. நடராஜன், முனைவர் க. பொன்முடி, எம். கே. மோகன் வருகை தர மாவட்ட ஆட்சித் தலைவர் க. சு. கந்தசாமி, இ.ஆ.ப. தலைமையில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, பொதுப்பணித் துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு), பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரத் துறை), ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து களஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் தூசி மோகன் (செய்யாறு), கு. பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), மு. பெ. கிரி (செங்கம்), கே. வி. சேகரன் (போளுர்), எஸ். அம்பேத்குமார் (வந்தவாசி) உடன் சென்றனர்.
 

thiruvannamalai kootam

 


திருவண்ணாமலை நகராட்சி, கிரிவலப் பாதையில் ஈசான்ய லிங்கம் அருகில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை, பொதுப்பணித் துறை மூலமாக அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 2.68 ஏக்கர் நிலத்தில் 87,000 சதுர அடி பரப்பளவில் 430 நபர்கள் தங்கும் வகையில் 28.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஊசாம்பாடி ஊராட்சியல் தேசிய வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ள பாலி கிரீன் ஹவுஸ் விவசாய முறை பணிகள், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சோமாசிபாடி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 8 இலட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் குப்பை தரம் பிரித்தெடுக்கும் கூடம், சோமாசிபாடி ஊராட்சியில், வெள்ளக்குளம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக, குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1.00 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி, கரை பலப்படுத்தும் பணிகள், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், கீழ்கச்சராப்பட்டு ஊராட்சி, தென்மாத்தூர் கிராமத்தில் அன்பு என்ற விவசாயின் ஒரு ஏக்கர் நிலத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் 2018-2019-ன் கீழ் 100 ரூபாய் அரசு மானியத்துடன் ரூ.97,134- மதிப்பீட்டில் கரும்ப பயிரில் சொட்டு நீர் பாசனம் மேற்கொள்ளப்பட்டு வருவது, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், தலையாம்பள்ளம் ஏரி, பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறை மூலமாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் மதகினை சீரமைத்து, கரையை உயர்த்தி பலப்படுத்தி, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்பின்னர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், தமிழக அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அங்கு அதிகாரிகள் மறுமதிப்பீட்டுக்குழு கேள்விகளை எழுப்பியது. அது குறிப்பு அதிகாரிகள் விளக்கமும், பதிலும் கூறினர். வேளாண்மை துறை சார்பில், கரும்பு வெட்டப்பட்ட பின்பு அதன் சோகைகளை தூள்தூளாக்கும் வேலைக்காக அரசின் சார்பில் ஒரு விவசாயிக்கு 8 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது என்றார் ஒரு அதிகாரி.இதனைக்கேட்டு அங்கு அமர்ந்திருந்த பல மக்கள் பிரதிநிதிகளுக்கே ஆச்சர்யமாக இருந்தது. உடனே இதுப்பற்றி பேசிய கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி ( திமுக ), கரும்பு சோகைகளை தூள்தூளாக்க மானியம் தருவது என்பது விவசாயிகள் பலருக்கு தெரியவில்லை. இதனை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். காரணம், இதுப்பற்றிய விவரம் இல்லாததாலே விவசாயிகள் அதனை எரிக்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என்றார்.

நாங்க சொல்றோம், அவுங்க செய்யறதில்லை என்றார் வேளாண்மை துறை அதிகாரி. அதுப்பற்றி அதற்கு பிறகு குழு கேள்வி எழுப்பவில்லை. இதுப்பற்றி கீழ்நிலை அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறும்போது, விவசாயிகளுக்கு தந்ததா இவுங்க கணக்கெழுதி எடுத்துக்கறாங்க. மக்களுக்கு அதை வெளிப்படுத்திட்டா வருமானம் போயிடும்மே என்றார்.
 

kootam 2

 


மறுமதிப்பீட்டுக்குழு என்பது அரசாங்கம் ஒரு திட்டத்துக்கு ஒதுக்கும் நிதியை அந்த திட்டத்துக்கு சரியாக பயன்படுத்தியுள்ளார்களா, ஒதுக்கப்பட்ட நிதி இருப்பில் இருந்தால் ஏன் பயன்படுத்திவில்லை, எவ்வளவு பயனாளிகளிடம் போய் அந்த திட்டம் சேர்ந்துள்ளது போன்ற பல கேள்விகளை முன்வைத்து அதிகாரிகளிடம் பதிலை பெறுவது. கேள்விகளை குழு எழுப்பியது. அதிகாரிகள் சொன்ன பதிலை அப்படியே ஏற்றுக்கொண்டு போய்விட்டது. திட்டங்களால் மக்கள் பயன்பெறாதது, அதில் உள்ள குளறுபடிகள் குறித்து எதுவும் கேள்வி எழுப்பவில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருந்தது.

இதுப்போன்ற கூட்டங்களில் செய்தியாளர்களை அனுமதித்தால் திட்டத்தின் சாதக – பாதகம் பற்றி மக்களுக்கு அந்த கருத்துக்கள் போகும், செய்தியாளர்கள் கவனிக்கிறார்கள் என்பதால் அதிகாரிகளும் சரியான தகவல்களை சொல்வார்கள். குழுவும் ஏனோ, தானோ வென இல்லாமல் கேள்விகளை எழுப்பும். ஆனால், அப்படியெதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே செய்தியாளர்களை அந்த கூட்ட அரங்கில் அனுமதிக்கவில்லை. உன்னை அடிக்கறது போல அடிக்கறன், நீ அழுவது போல் அழு எனச்சொல்வது போல் மறுமதிப்பீட்டுக்குழு கேள்வி எழுப்பியது, அதிகாரிகள் பதில் சொன்னார்கள். கூட்டம் முடிந்ததும் சகஜமாக ஜாலியாக போனார்கள்.

மக்களையும், சட்டத்தையும் ஏமாற்றவே இப்படியொரு கூட்டம்.  

 

 

சார்ந்த செய்திகள்