"ஊரெல்லாம் பிரச்சனையாக இருக்கு.. அது தெரியாமல் இங்க வந்து உட்காந்துருக்கே.. உன்னிடம் யார் என்ன பிரச்சனை செய்தாலும் சொல்லு..! அம்மா நான் இருக்கேன்ல.. தீர்த்து வைக்கின்றேன்பா." என நைச்சியமாக பேசி, தற்கொலைக்காக மின் கோபுரத்தில் மூன்றரை மணி நேரமாக ஏறி அமர்ந்திருந்த இளைஞரை தரையிறக்கியுள்ளார் தாசில்தார் ஒருவர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அகதிகள் முகாமில் வசிக்கும் ஜீவா, சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகிலுள்ள திருப்பதி நகரில், முத்துலெட்சுமி என்பவருடன் வசித்து வருகின்றார். முத்துலெட்சுமிக்கு முன்னரே திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில், அவரை மறுமணம் செய்து வாழும் ஜீவா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தினை நடத்தி வந்துள்ளார். கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த நிலையில், நேற்று அதிகாலையிலேயே சிவகங்கைக்கு, வேலைக்கு செல்வதாகக்கூறி சென்றவர் மாலையில் குடிபோதையுடன் வீடு திரும்பியிருக்கின்றார். இதனால் கணவன், மனைவிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் இதனைக் கண்டித்திருக்கின்றார்கள். இதனால் கோபமடைந்த ஜீவா அருகிலுள்ள மின்கோபுரத்தில் ஏறி உச்சிக்கே சென்றவர், "பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்யாவிடில் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டலை" தொடர்ந்திருக்கின்றார்.
உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மதகுப்பட்டி எஸ்.ஐ. ரஞ்சித் உள்ளிட்ட போலீசார், சிவகங்கை தீயணைப்பு துறையினர் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்திருக்கின்றனர். உடனடியாக பலனளிக்காத நிலையில், தாசில்தார் மைலாவதியோ, "ஏம்பா..! நான் உன்னுடைய அம்மா மாதிரி.. நீயும் எம்புள்ளை மாதிரி தான் இருக்கிற.. உன்னைய தொந்தரவு செய்தவர்களை கூறு, உடனடியாக அம்மா ஆக்ஷன் எடுக்கின்றேன்." என நைச்சியமாக பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளார். ஜீவாவும் கீழே இறங்க ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஜீவாவை மீட்ட தீயணைப்புத்துறையினர் 108 வாகனம் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின் இணைப்பு துண்டிப்புக் காரணமாக திருக்கோஷ்டியூர், கண்ட்ரமாணிக்கம், நாட்டரசன்கோட்டை மற்றும் காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூன்றரை மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஜீவாவிற்கு ஊரடங்கு நிலையில் மது கிடைத்தது எப்படி.? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.