போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தர்பார் பட விவகாரத்தில் விநியோகஸ்தர்களிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருப்பதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டுமென்றும் கூறியுள்ளார். இந்த மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
தர்பார் திரைப்பட நஷ்ட விவகாரம் தொடர்பான மிரட்டல் குறித்தும் பாதுகாப்பு கோரியும் ஏ.ஆர்.முருகதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பிப்ரவரி 10- ஆம் தேதி விளக்கமளிக்க காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தை வெளியிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக வினியோகிஸ்தர்கள் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த 3- ம் தேதி, தேனாம்பேட்டையில் உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அலுவலகம் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக, வினியோகஸ்தர்கள் எனக் கூறிக் கொண்டு வந்த அடையாளம் தெரியாத 25 பேர், அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி பிரச்சனை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தன்னுடைய வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், லைகா நிறுவனத்திற்காக தர்பார் திரைப்படத்தில், இயக்குநராக மட்டுமே தான் பணியாற்றியுள்ள நிலையில், படத்தின் திரையரங்கு உரிமை, சாட்டிலைட் உரிமை, விநியோக உரிமை போன்றவற்றில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், நஷ்டம் ஏற்பட்டது தொடர்பாக லைகா நிறுவனத்தை அணுகாமல், தன்னை மிரட்டி வருவதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த மனு, இன்று (06/02/2020) நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 3-ம் தேதி முதல் இச்சம்பவங்கள் நடந்து வருவதாகவும், அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என பிப்ரவரி 4-ம் தேதி காவல்துறைக்கு மனு அளித்ததாகவும், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்தச் சம்பவங்கள் இரு வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்துள்ளதால், இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இதனை ஏற்ற நீதிபதி, ஏ.ஆர்.முருகதாஸின் கோரிக்கை மனு மீது எடுத்த நடவடிக்கை தொடர்பாக பிப்ரவரி 10-ம் தேதி விளக்கமளிக்க, காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.