தமிழகத்தில் கரோனா இரண்டாம் முறை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வத்துடன் முகாம்களை அணுகி வருகின்றனர். இந்நிலையில் தரமான முகக் கவசங்கள் வழங்குவதற்காக தற்போது ஆலோசனை நடைபெற்று வருவதாக தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் தரமற்ற முகக்கவசங்கள் வழங்கப்பட்டதாக கூறிய அவர், தரமான முகக்கவசங்களை வழங்குவதற்கு தற்போதைய அரசு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. சார்பட்டா பரம்பரையில் வரும் டான்சிங் ரோஸ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் என இணையதளத்தில் பரவுகிறது எனவும் தெரிவித்தார்.
‘சார்பட்டா’ படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது வருத்தமளிப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். ''‘சார்பட்டா’ படம் முழுக்க முழுக்க திமுக பிரச்சார படமாகவே இருக்கிறது. எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. கலை மூலம் உண்மைகளை மறைப்பது, வருங்கால தலைமுறைக்குச் செய்யும் துரோகம். விளையாட்டை விடாப்பிடியாக கைக்கொண்ட எம்ஜிஆர், எத்தனையோ வீரர்களை ஊக்குவித்தவர். அவரை தவறாக சித்தரித்துள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது'' என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.