வேலூர் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் சாலையில், ஆலங்காயம் அடுத்த ஆர்.எம்.எஸ்.புதூர் பகுதியில் சாலையில் வந்துக்கொண்டுயிருந்த தனியார் பேருந்து மீது எதிரே சென்ற லாரி மோதியது. இதில் பேருந்து ஓட்டுநர், பயணிகள் என 6 பேர் படுகாயம்மடைந்தனர். அவர்கள் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயத்துக்கு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை ஒருவழிச்சாலையாக அமைத்துள்ளனர். அதுவும் பார்ப்பதற்கு பாதிதான் சாலை போடப்பட்டுள்ளதுபோல் உள்ளது. அந்த தார்சாலை தரையை விட அரையடி உயர்த்தி போடப்பட்டுள்ளது. அப்படி சாலை போடும்போது சாலையின் இருபுறமும் மண் கொண்டு வந்து கொட்டி தார்சாலையும், மண்சாலையும் சமமாக இருப்பது போல் செய்ய வேண்டும். இது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுயிருக்கும்.
இந்த சாலை அமைத்தபின் அப்படியெதையும் ஒப்பந்தம் எடுத்தவர் செய்யவில்லை, அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் தார்சாலையில் வாகனங்கள் சென்றுக் கொண்டிருக்கும்போது, எதிரே ஒரு வாகனம் வந்து வழிவிடும்போது தடாலென வண்டி பள்ளத்தில் இறங்குகிறது. பகலில் வாகன ஓட்டிகள் சமாளித்துக்கொள்கின்றனர், இரவு நேரத்தில் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள் என்றார்கள். இப்படி தரமற்ற முறையில் சாலை அமைத்ததால் தான் இப்படி அடிக்கடி விபத்து நடந்துவருகிறது என்கிறார்கள்.