Skip to main content

தலித் - முஸ்லிம் குழப்பம்: திருமாவளவன் விளக்கம்

Published on 15/08/2017 | Edited on 15/08/2017
தலித் - முஸ்லிம்  குழப்பம்: திருமாவளவன் விளக்கம்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை:

’’இந்து மதத்தைச் சார்ந்த தலித் ஒருவர் கிறித்தவ மதத்துக்கு மாறினால் அவர் 'தலித் கிறித்தவர்' ஆகிறார். ஆனால், அதே தலித் 'இஸ்லாம்' தழுவினால் அவர் 'முஸ்லிம்' ஆகிறார். அவரது பிறப்பிலிருந்தே அவரோடு இரண்டற கலந்திருந்த 'தலித்' என்னும் அடையாளம் இஸ்லாத்தை ஏற்றதும் அது தன்னியல்பாக காணாதொழிந்து போகிறது. இதுதான் விடுதலைச்சிறுத்தைகளின் புரிதலும் நம்பிக்கையுமாகும். இந்த நிலைபாட்டில் விடுதலைச்சிறுத்தைகளுக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை. 

கடந்த ஆக10 அன்று, தலித் கிறித்தவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வெளியான எமது அறிக்கையும் அந்தக் கோரிக்கைக்காக சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்றது குறித்து எனது முகநூலில் செய்யப்பட்ட பதிவும் சிலரிடையே கருத்து முரண்பாட்டை அல்லது கருத்துக் குழப்பத்தை உருவாக்கிவிட்டது. 

தங்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்பது அகில இந்திய அளவில் எழுப்பப்படும் தலித் கிறித்தவர்களின் கோரிக்கையாகும். தொடக்கத்திலிருந்தே அதனை ஆதரித்து விடுதலைச்சிறுத்தைகளும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். அன்று வெளியான எமது அறிக்கையில் தலித் கிறித்தவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றுதான் மைய அரசுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

அதுபோல, தலித்துகளாயிருந்து முஸ்லிம்களாக மாறியவர்களைத் தலித் முஸ்லிம்களாக ஏற்கவேண்டுமென்றோ அதற்கான பட்டியலில் அவர்களைச் சேர்க்க வேண்டுமென்றோ அந்த அறிக்கையில் கோரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. ஆனால், மதமாற்றம் தொடர்பான பிரச்சினைகளில்  கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களை இந்திய ஆட்சியாளர்கள் எவ்வாறு அணுகுகின்றனர்; அவர்களின் உள்நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதை அம்பலபடுத்தும் நோக்கில்தான் அந்த அறிக்கையில் எமது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளோம். 

அதாவது, இஸ்லாத்துக்கும் கிறித்தவத்துக்கும் தலித் மக்கள் மதம் மாறுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் உள்நோக்கமாக உள்ளது. ஆகவேதான், சீக்கியத்திற்கும் பௌத்தத்திற்கும் மாறிய தலித்துகளின் கோரிக்கைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு, 1950ஆம் ஆண்டில் பிறப்பித்த குடியரசுத் தலைவரின் ஆணையில் இரண்டுமுறை திருத்தம் செய்துள்ளனர். அத்தகைய உள்நோக்கம் அவர்களுக்கு இல்லையென்பது உண்மையெனில், அத்தகைய கோரிக்கையை எழுப்பாத இஸ்லாமியர்களுக்கு ஏதும் செய்யவில்லையென்றாலும், அக்கோரிக்கைக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தலித்கிறித்தவர்களையாவது தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைத்திருக்கலாமே; அதுவும் நடைபெறவில்லையே ஏன் என்கிற கேள்வி எழுகிறது. 

அவ்வாறு செய்தால் கிறித்தவம் நோக்கிய மதமாற்றம் இன்னும் பன்மடங்கு தீவிரமாகும்; காலப்போக்கில் கிறித்தவ மதத்தின் மக்கள்தொகை எண்ணிக்கையால் வலுப்பெற்றுவிடும் என்பதே ஆட்சியாளர்களின் அச்சமென தெரியவருகிறது. அதே அடிப்படையில், இஸ்லாம் மதமும் வலுப்பெற்றுவிடக்கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கமாகும். இவ்வாறு, கிறித்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கு எதிராகவும் இந்து மதத்துக்கு ஆதரவாகவும் இந்திய ஆட்சியாளர்கள் வெளிப்படையாகச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டுவதும் அப்போக்கைக் கண்டிப்பதும்தான் விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடாகும். 

இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. எனினும், விடுதலைச்சிறுத்தைகளின் முகநூல் பதிவுகளில் தலித் முஸ்லிம் என்ற சொல்லாடல் இருப்பது ஏன்? இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை வலிந்து திணிப்பது ஏன்? இது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தலித்துகளை இழிவு செய்வதாகதா? எந்த சாதி அடையாளத்தை உதறிவிட்டு இஸ்லாத்திற்கு வந்தார்களோ அதனை இதன்மூலம் இஸ்லாத்திலும் மேலும் தொடரச் செய்யவும் பரவச்செய்யவும் வழி வகுப்பதாகாதா? இப்படி பல கேள்விகள் எழுவது இயல்பானது தான்!

ஆனால், விடுதலைச்சிறுத்தைகளுக்கு அப்படியொரு நோக்கம் எதுவுமில்லை என்பது மட்டுமே இதற்கான விடை என்பதையும்; தலித் கிறித்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பில் பதிவிடப்பட்ட கருத்துக்களின் தாக்கத்தால் நேர்ந்த பிரதிபலிப்புகள்தாம் அவை என்பதையும் நேர்மைத்திறமுள்ளோர் யாவரும் நன்கறிவர். அதாவது, இந்திய அளவில் தலித் கிறித்தவர்கள் நடத்தும் இதற்கான போராட்டங்களில் தங்களுக்கு மட்டுமின்றி தலித்துகளாயிருந்து முஸ்லிமானவர்களுக்கும் இதே கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர் என்பது இத்தளத்திலுள்ள யாவரும் அறிந்ததே ஆகும். 

இப்போராட்டத்தை, இடஒதுக்கீடு போன்ற சலுகைகளுக்கானது என்று மட்டுமே குறுகிய கண்ணோட்டத்தில் சுருக்கிப் பார்ப்பதால்தான், இதன் பிற பரிமாணங்களையும் பாதிப்புகளையும் அறிய முடிவதில்லை. மாறாக, கிறித்தவத்தையும் இஸ்லாத்தையும் புறக்கணிப்பது ஏனென்று நாம் கேள்வி எழுப்புவதையும்கூட, சாதி அடையாளத்தைத் தக்க வைப்பதற்கான முயற்சியாக மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது. 

அதைவிட, குடியரசுத்தலைவரின் அந்த ஆணை, தனிநபர்களுக்கான அடிப்படை உரிமைகளையும், சுதந்தரத்தையும் பறிக்கிறது என்பதையும் - குறிப்பாக, ஒருவர் தான் விரும்பும் மதத்தை, விரும்பும் கடவுளை, விரும்பும் வழிபாட்டு முறையை ஏற்றுக்கொள்ளும் 'மதமாற்ற உரிமை' யைப் பறிக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 'மதச்சார்பின்மை' கோட்பாட்டுக்கு அது மறைமுகமாக வேட்டு வைப்பதை புரிந்து கொள்ளவேண்டும். 

இதனடிப்படையில் தான் இக்களத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஓங்கிக் குரல் கொடுக்கிறது. 
1950 சனவரி 26 அன்று இந்திய அரசு  குடியரசான பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 10, அன்று வெளியிடப்பட்ட குடியரசு தலைவரின் ( டாக்டர் இராஜேந்திர பிரசாத் ) ஆணையில், ( பத்தி-3 இல் ) இந்து மதம் அல்லாத பிறமதங்களுக்கு மாறியவர்கள் தாழ்த்தப்பட்டோராக அங்கீகரிகப்பட மாட்டார்கள்" என கூறப்பட்டுள்ளது. 

இது அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்புக்கூறுகளில் ஒன்றான 'மதச்சார்பின்மைக்கு' எதிரானது என்று அதனை எதிர்த்து பௌத்தம், சமணம், சீக்கியம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களுக்கு மாறியவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதன்விளைவாக, மைய அரசு அந்த ஆணையில் இரண்டு முறை திருத்தம் செய்துள்ளது. அதன்படி, சீக்கிய மதத்திற்கு மாறியவர்களையும் (1956), பௌத்த மதத்திற்கு மாறியவர்களையும் (1990), மைய அரசு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது. 

இதனால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகள் தங்களையும் அப்பட்டியலில் சேர்க்கவேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். தமிழகத்தைச் சார்ந்த தலித் கிறிஸ்தவர் ஒருவர் தொடுத்துள்ள அவ்வழக்கில், தலித் சமூகத்திலிருந்து மதம் மாறிய இசுலாமியரான ஒருவர், அரசுக்கு எதிரான தரப்பினரில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டுள்ளார். மேலும், மதம் மாறிய இசுலாமியர் ஏழுபேர், குடியரசு தலைவரின் அதே ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனித் தனியே வழக்குத் தொடுத்துள்ளனர். 

குடியரசுத் தலைவரின் ஆணையிலுள்ள மூன்றாவது பத்தியை முற்றிலும் நீக்கம் செய்யவேண்டுமென தொடுக்கப்பட்ட அவ்வழக்கு, கடந்த 13 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை விரைந்து முடிக்க வேண்டுமென்பதில் ஆட்சியாளர்கள் சிறிதும் முனைப்புக் காட்டவில்லை. 

இந்தியாவில் தோன்றிய மதங்கள் மற்றும் இந்து மதத்தின் கிளைகள் என்று கருதியே ஆட்சியாளர்கள் சீக்கியத்தையும் பௌத்தத்தையும் அங்கீகரித்துள்ளனர் என்கிற கருத்து இங்கே நிலவுகிறது. ஆனால், கிறித்தவம், இஸ்லாம் ஆகியவை அந்நிய மதங்கள் என்றும், ஆதலால் இந்துக்கள் அம்மதங்களுக்கு மாறுவதை ஊக்கப்படுத்தக் கூடாது என்றும், ஆட்சியாளர்கள் அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர் என அறியமுடிகிறது. 

இந்நிலையில், ஆளுவோரின் இந்துமதச் சார்புநிலையையும் கிறித்தவம் இஸ்லாம் ஆகியவற்றுக்கு எதிரான வெறுப்பு மனோநிலையையும் அம்பலப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். உள்நாட்டில் தோன்றிய மதங்களுக்கு ஒரு அணுகுமுறை, அயல் நாட்டில் தோன்றிய மதங்களுக்கு வேறொரு அணுகுமுறை என்பது இந்திய ஆட்சியாளர்களின் போக்காக உள்ளது. 

இது, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு எதிராக அவர்கள் எவ்வளவு வெறுப்பைக் கொண்டுள்ளனர் என்பதை இதன்மூலம் வெளிப்படுத்துகிறது. இது மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சனநாயகத்திற்கும் எதிரானது என்பதால், இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டியதும் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை உருவாக்க வேண்டியதும் நமது பொறுப்பாகும். 

இதனடிப்படையில் தான், அவ்வப்போது கிறிஸ்தவ அமைப்பினர் விடுக்கும் அழைப்பையேற்று இத்தகைய போராட்டங்களில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பங்கேற்று வருகிறது. அதன்படியே, கடந்த ஆகஸ்ட் 10 அன்று சென்னையில் 'தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பின்' முன்முயற்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கலந்து கொண்டது. இக்கூட்டமைப்புடன் விடுதலைச் சிறுத்தைகளின் 'கிறித்தவ சமூகநீதிப் பேரவை' யும் இணைந்து செயலாற்றியது என்றாலும், அப்போராட்டத்திற்கான துண்டறிக்கைகள், பதாகை மற்றும் நிதி போன்ற யாவும் தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பின் சார்பில்தான் ஏற்பாடானது. 

வழக்கம்போல அவர்கள் துண்டறிக்கைகள் மற்றும் பதாகையில்" தலித் கிறிஸ்தவர், தலித் முஸ்லீம் ஆகியோரைப் பட்டியலினத்தில் சேர்க்க" என அச்சிட்டிருந்தனர். இந்நிலையில், எனது முகநூலில் செய்திகளைப் பதிவிடும் தம்பி ஒருவர், அந்த துண்டறிக்கையிலிருப்பதைப் போலவே "தலித் கிறிஸ்தவர், தலித் முஸ்லிம்" என பதிவிட்டிருக்கிறார். பின்னர் அது தெரியவந்து சரி செய்யப்பட்டது. 

தலித் முஸ்லிம் என்று துண்டறிக்கைகளில் பதிவிட்டிருப்பது குறித்து தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பினரிடம் வினவியபோது, வட இந்திய மாநிலங்களில் கிறித்தவம் ஏற்றுக்கொண்ட தலித்துகளுடன், இஸ்லாம் தழுவிய தலித்துகளும் 'தலித் முஸ்லீம்' என்ற பெயரிலேயே வீதிக்கு வந்து போராட்டங்களில் பங்கேற்பதாகவும் அதனடிப்படையில்தான், அந்த சொல்லாடலைக் கையாளுவதாகவும் கூறினர். 

அத்துடன், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா மற்றும்  நீதியரசர் ராஜேந்திர சச்சார் ஆகியோரின் அறிக்கைகளில், தலித்துகளாயிருந்து மதம் மாறிய இசுலாமியர்களின் சமூக, பொருளாதார நிலை குறித்து விவரிக்கும்போது, 'தலித் முஸ்லிம்' என்ற சொல்லாடல்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன என்றும் தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பினர் கூறினர். 

விடுதலைச் சிறுத்தைகளுக்கு அதில் மாற்றுக் கருத்து உண்டு என்றாலும், அக்கூட்டமைப்பினருடன் இணைந்து களமாடும் நிலையில் அதன் தாக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியது தவிர்க்க இயலாததே ஆகும். இஸ்லாத்தின் சிறப்பே 'சாதி ஒழிப்பு தான்' என்பதை நெடுங்காலமாகப் பரப்புரை செய்து வரும் விடுதலைச்சிறுத்தைகளுக்கு இதில் குழப்பம் ஏதுமில்லை. அதேபோல விடுதலைச்சிறுத்தைகளை நன்கு அறிந்தவர்களுக்கு இதில் துளியும் குழப்பமிருக்க வாய்ப்பில்லை. ’’

சார்ந்த செய்திகள்