![daily wages employee passed away viluppuram](http://image.nakkheeran.in/cdn/farfuture/uGd9BMEfjY366j8M4ygVduvvy8oKPxyztZcaTCpbWEY/1660824647/sites/default/files/inline-images/hand-in_240.jpg)
விழுப்புரம் மாவட்டம், டி.கொணலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி அருள்(45). இவருக்கு ஆரியமாலா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். மது போதைக்கு அடிமையான அருள், தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தில் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அருள், தன் மனைவியிடம் நண்பருடன் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் அவரது உறவினர்கள் அருளை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
இந்த நிலையில், அந்த கிராமத்துக்கு அருகே உள்ள வட மாம்பாக்கம் கிராமத்தின் அருகில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் அருள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அருள் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த திருநாவலூர் போலீசார் அருளின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அருளின் மனைவி ஆரியமாலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.