தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பாக துறை அதிகாரிகளுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அரசின் அனைத்து துறை அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதனைப் பின்பற்ற வேண்டும்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த கடித உத்தரவானது அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'தினம் ஒரு குறள்' என்ற அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், "அரசு மற்றும் அரசு தொடர்புடைய அலுவலகங்களில் தினம் ஒரு குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற அரசாணையை கறாராக பின்பற்ற வேண்டும் என தலைமை செயலாளர் அறிவுறுத்தியிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சமத்துவம் முழங்கிய தொன்மை பெருமை கொண்ட திருக்குறளின் கருத்துக்களை தொடர்ந்து பரப்புவது அவசியமாகும்.
சாதி, மதக் கருத்துக்களால் மனிதர்களை பிளவுபடுத்தி, வெறுப்பு விதைகளை விதைத்து வரும் சூழலில் அரசு அலுவலகங்கள் முன் மாதிரியாக திகழ்ந்திட வேண்டும் என்ற அரசின் கொள்கை முனைப்பு பாராட்டத்தக்கது. கிராம நிர்வாக அலுவலகம் தொடங்கி, தலைமைச் செயலகம் வரை அனைத்து அலுவலகங்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்ற தலைமைச் செயலாளர் அறிவுரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.