தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்பே தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை முதல் அந்த கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர இருப்பதால் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து நாளை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நாளை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்ட 7 மருத்துவ அதிகாரிகள் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள். இதில் வரக்கூடிய பொங்கல் பண்டிகையில் நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அடுத்த 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விடுமுறைக்குச் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்குப் பேருந்துகள் தேவைப்படும் எனவே அன்றைக்கு முழு ஊரடங்கை நடைமுறைப் படுத்தலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்த முடிவுகள் நாளை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.