கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட 5 பேர் மீது யுஏபிஏ (உபா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசியப் புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட தமிழக முதல்வர் பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் கோவையில் பாதுகாப்பினை தொடர்ந்து உறுதி செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கரும்புக்கடை, சுந்திராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் மூன்று காவல் நிலையங்கள் அமைக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கோவை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அதி நவீன கேமராக்களை பொருத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.