திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயரான 25 வயது நிரம்பிய பெண். இவர், தில்லைநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் மாப்பிள்ளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது பெங்களுரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரின் சுய விவரம் பிடித்து போகவே அவரிடம் பேசி உள்ளார். இது நாளடைவில் சாட்டிங் செய்யும் அளவிற்கு வளர்ந்தது.
அதன் பின்னர் அந்த வாலிபர் தன் சொந்த ஊர் பெங்களூர் என்றும் தற்போது தான் வெளிநாட்டில் வேலை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் சம்பாதித்த நகை மற்றும் வெளிநாட்டு கரன்சி ஆகியவை இந்திய மதிப்பில் ரூ.2 கோடி அளவுக்கு இருப்பதாகவும், அதனை பார்சலில் அனுப்பி விடுவதாகவும் அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில், அடுத்த ஒரு சில தினங்களில் அந்த பெண்ணிடம் டெல்லி விமான நிலையத்தில் பேசுவதாக ஒரு பெண் பேசியுள்ளார். அதில், தங்கள் பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளது. அதனை பெற வேண்டும் என்றால் ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். இதனை நம்பி அந்த பெண், 8 லட்சம் ரூபாயை அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.
ஆனால், பார்சல் வராததால் அந்த பெண் மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து அழைத்ததாக வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இது குறித்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, உடனடியாக அந்த வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த வாலிபர் நைஜீரியாவைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது அவர் மேற்கு வங்காளத்தில் தங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.