அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் அமைந்திருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்கள் கூச்சலிட்டனர். அதன்பிறகு ஓபிஎஸ்- இபிஎஸ் மேடைக்கு வர, பொதுக்குழு துவங்கியது. இதுவரை அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் அதிமுகவின் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கை கடிதம் ஒன்றை சி.வி.சண்முகம் மேடையில் வாசித்தார். அதில், ''இன்று நடைபெறும் பொதுக்குழுவில் 2,190 பொதுக்குழு உறுப்பினர்களால் கையொப்பமிட்டு கொடுக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை குறித்து விவாதிக்கக் கோரிக்கை வைக்கிறோம். அதிமுகவில் இரட்டை தலைமையால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், சங்கடங்கள், நிர்வாக சிக்கல்கள் குறித்து விவாதிக்க வேண்டும். இரட்டை தலைமையால் திமுகவை எதிர்த்து வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட முடியாத சூழல் இருக்கிறது .இது தொண்டர்கள், நிர்வாகிகள், மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை தலைமையின் முரண்பாடான, தெளிவில்லாத செயல்பாட்டால் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டுள்ளது. எனவே ஒன்றைத் தலைமை தொடர்பாக விவாதித்து முடிவு செய்ய வேண்டும். அதற்காக இந்த பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை அதைத் தலைவர் அறிவிக்க வேண்டும்'' என்றார்.
அதன்பின் கோரிக்கை மனுவை சி.வி.சண்முகம் அவைத்தலைவரிடம் கொடுக்க, அடுத்த மாதம் ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.