ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் முடிவைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். தமிழக சட்டப்பேரவையில் இன்று விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைச் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்குக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
இந்நிலையில், அரசின் இந்த முடிவை எதிர்த்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை சில நிமிடங்களில் கைது செய்தனர். சி.வி சண்முகம் கைதை கண்டித்து விழுப்புரம்-புதுவை சாலையில் அமர்ந்து நூற்றுக்கணக்கான அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.