உத்திரமேரூரில் உள்ள கோயிலில் சோழர் காலத்து தங்க புதையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் உள்ள குழம்பேஸ்வரர் கோயில் புனரமைப்பு பணியில் கருவறை அருகே கருங்கல் படிக்கட்டுகளை அகற்றிய போது தங்க புதையல்கள் கண்டெடுக்கப்பட்டது. புதையலில் சோழர் காலத்து தங்க நாணயங்கள், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் இருந்தது.
அதைத் தொடர்ந்து, ஊர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க பொருட்களை உத்திரமேரூர் வட்டாட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, 'கோயில் புனரமைப்பு பணியின் போது கிடைத்த தங்க புதையலை அரசிடம் ஒப்படைக்கப் போவதில்லை; கிடைத்தத் தங்கத்தைக் கொண்டு கோயில் திருப்பணிகளை செய்வோம்' என்று ஊர் பொதுமக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குழம்பேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல்களை கிராம மக்களிடம் இருந்து போலீஸ் உதவியோடு மீட்டு கருவூலத்தில் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இந்த கோயில் கிடைத்த தங்க ஆபரணங்கள் 16- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். அந்நியர் படையெடுப்பிலிருந்து பாதுகாக்க புதைத்திருக்கக் கூடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.