
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் நேற்று கேரளாவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று காலை சென்னை அழைத்துவரப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட மீராமிதுனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வாக்குமூலம் தராமல் மீரா மிதுன் அடம்பிடிப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வாக்குமூலம் தர மறுத்து மீரா மிதுன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருகிறார் என கூறப்பட்ட நிலையில், அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். மீரா மிதுனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.