தற்போது இந்தியா முழுவதும் கரோனா இரண்டாவது அலை ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள், தொழிலாளர்கள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள் மற்றும் தொழிலாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களை பயணிக்க அனுமதிக்கக்கூடாது என்று மத்திய அரசு அனைத்து விமான நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சமீபத்தில் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்து அதில் நோய்த் தொற்று இல்லை என்ற சான்றிதழோடு திருச்சிக்கு விமானம் மூலம் வருகைதந்த பயணிகளில் 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
மீண்டும் அதே போன்ற சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருடன் பயணித்த 179 பயணிகளும் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் விமானநிலையத்தில் பயணிகள் சென்ற இடங்களிலெல்லாம் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டதோடு பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்திருக்க அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.