தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தற்போது இந்த ஊரடங்கை ஜூலை 19ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 19ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதில் சில கட்டுப்பாடுகள் தொடர்கிறது. மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து கிடையாது. ஆனால் புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் திரையரங்குகள் திறக்கப்படாது. உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 9 மணிவரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கும். நீச்சல் குளங்களுக்குத் தடை. பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாய, அரசியல் நிகழ்வுகள், திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடர்கிறது. மதுக்கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், சிறுவர் பூங்கா உட்பட பூங்காக்கள் திறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி. இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே இரவு 8 மணிவரை அத்தியாவசியக் கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுவந்த நிலையில், வரும் 12ஆம் தேதிக்குப் பிறகு அத்தியாவசியக் கடைகள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான தேர்வுகளை அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் நடத்த அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.