ஜிஎஸ்டி வரியை மாற்றியமைக்கக் கோரி
சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சிறு குறுந் தொழில்களை முடக்கும் டிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றியமைக்கக் கோரி சென்னை பெருநகர சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளியன்று (ஆக. 18) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைத் தலைவர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை கலந்து கொண்டு பேசியதாவது:
’’புதிய ஜிஎஸ்டி வரி வதிப்பால் திருப்பூரில் ஜவுளி, ஈரோடு, கரூரில் விசைத்தறி, சிவகாசியில் பட்டாசு தொழில், கழிவு பிளாஸ்டிக் உற்பத்தி என பல தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல லட்சக்கணக்கான சிறு குறுந் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் குடோன்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி குறைந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் விலை 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் கடுமையாக விலைவாசி உயர்ந்துள்ளன. கேஸ் மானியம் ரத்து, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கெடுபிடி என சாதாரண ஏழை எளிய மக்கள் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வருகின்ற அத்தனை மக்கள் விரோத திட்டங்களுக்கும், கொள்கைகளுக்கும் மாநில அரசு கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு அளிக்கிறது.
ஜிஎஸ்டி மூலம் அரசின் வருமானம் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், மதுபானம் உள்ளிட்டவை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படவில்லை. காரணம் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 55 விழுக்காடு வரி வருமானம் அரசுக்கு கிடைக்கிறது. 156 நாடுகளில் ஜிஎஸ்டி வரி உள்ளது. ஆனல் எங்கும் 28 விழுக்காடு வரி கிடையாது. முன்பு 5 விழுக்காடு வரி செலுத்தி வந்த சிறு குறுந் நிறுவனங்கள் இப்போது 18 விழுக்காடு முதல் 28 விழுக்காடு வரை வரி செலுத்த வேண்டியுள்ளது.
ரேஷன் கடைகளை மூடினால் சாதாரண ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவர். குறிப்பாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே ரேஷன் விநியோகத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். சிறு குறுந்தொழிற்சாலைகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இல்லையேல் அனைத்து பகுதி தொழிலாளர்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.
சுமைப்பணி சங்க பொதுச் செயலாளர் ஆர்.அருள்குமார், பொருளாளர் ஏ.ஆரோக்கியசாமி, துணைத் தலைவர்கள் ஜி.கோதண்டன், பி.புஷ்பராஜ், வி.காளிமுத்து, ஆர்.விநாயகம், துணைச் செயலாளர்கள் ரகுபதி, தாமோதரன், லட்சுமணன், தென்னரசு, அற்புதராஜ் ஆகியோரும் பேசினர். முன்னதாக துணைச் செயலாளர் எம்.ராமன் வரவேற்றார். எம்.ராயதுரை நன்றி கூறினார். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- அசோக்