சமீபத்தில் ’மக்கள் நீதி மையம்’ கட்சி நடத்திய கிராமசபை கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் கமல்ஹாசன், சட்டம் 497 (திருமணம் தாண்டிய உறவு என்பது குற்றம் என்று சொல்லும் சட்டம்) ரத்து பற்றியும், ரஃபேல் போர் விமானம் ஊழல் பற்றியும் மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றியும் கருத்து தெரிவித்தார். அவர் பேசியதன் சுருக்கம்...
![kk](http://image.nakkheeran.in/cdn/farfuture/cldBNM5fPbcRZQynFsxEi68GZPRLwMsfxs7ZCOXw-WQ/1538240022/sites/default/files/inline-images/kamal-in.jpg)
"நமது புராணத்தில்கூட இந்த அளவுக்கு திறந்த மனது இருந்திருக்கிறது. ஆகையால், இன்றைய நவீன யுகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான நிலை இருக்க வேண்டும் என்பது தவறவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இதில் கலாச்சார சீர்கேடு எனும் வாதங்களும் இருக்கிறது. ஆனால், உண்மையில் கலாச்சாரம் என்பது ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும். அதனால், அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
ரஃபேல் ஊழல் என்பதை ஒட்டுமொத்த ராணுவ ஊழல் என்று சொல்லமுடியாது. காரணம், ராணுவம் என்பது பல வீரர்கள் சேர்ந்தது. அதில் யாரோ ஒரு மந்திரியோ, அதிகாரியோ செய்யும் ஊழலை ஒட்டுமொத்த ராணுவ ஊழல் என்று சொல்வது தவறு. அதேபோல்தான் அரசியலையும் சாக்கடை என்று சொல்வது தவறு. ஏனென்றால் இன்று நாங்கள் வந்திருக்கிறோம்" என்றார்.
பெட்ரோல் விலை பற்றி பேசும்போது "மத்திய மாநில அரசுகள் சேர்ந்துதான் தீர்வுகாண வேன்டும். அதிலும் முக்கியமாக மத்திய அரசுதான் இந்த விஷயத்தில் தீர்வுகாண வேன்டும்" என்றார். "இந்த பெட்ரோல் விலை உயர்வு என்பது வெறும் ஒரு பொருள் சம்மந்தப்பட்டது மட்டும் கிடையாது. இதனால், விமான டிக்கெட்டில் இருந்து நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் வரை விலை உயரும். அதனால் அதை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்" என்று தெரிவித்தார்.