Skip to main content

சவ ஊர்வலத்தில் வீசப்பட்ட மாலையால் இளைஞர் உயிரிழப்பு

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

 Cuddalore youth passes away bike accident

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள எல்.என் புரம் பகுதியில் வசிப்பவர்கள் மோகன் - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ராஜ்குமார் (32) மற்றும் ராஜ்கமல்(30) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ராஜ்குமார், இன்ஜினியரிங் படித்துவிட்டு, தனது மனைவியுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் ராஜ்கமலுக்கும்  வேப்பூரை சேர்ந்த இன்ஜினியர் குணசுந்தரிக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.

 

குணசுந்தரி மற்றும் அவரது மாமியார் விஜயலட்சுமி ஆகிய இருவரும் வெளியூர் சென்று விட்டு நேற்று முன் தினம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் வந்து இறங்கினர். வீட்டுக்கு செல்வதற்காக சுந்தரி தனது கணவர் ராஜ்கமலுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இதன்பிறகு இருசக்கர வாகனத்தில் பஸ் நிலையம் வந்த ராஜ்கமல் முதலில் தனது மனைவி குணசுந்தரியை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும் தனது தாய் விஜயலட்சுமியை அழைத்துச் செல்வதற்காக பஸ் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது தனது தாய் விஜயலட்சுமி சென்னை - தஞ்சாவூர் சாலையில் மேம்பாலத்தில் எதிரே நடந்து வந்து கொண்டிருந்தார். உடனே தாயாரை வண்டியில் அழைத்து செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது அந்த வழியாக சவ ஊர்வலம் சென்றுள்ளது. அந்த ஊர்வலத்தில் சென்றவர்கள் சவத்தின் மீது போடப்பட்டிருந்த மாலைகளை சாலை முழுவதும் நீண்ட தூரத்திற்கு வீசியிருந்தனர்.

 

மழை பெய்து விட்டிருந்த நிலையில்  சாலையில் மலர் மாலைகள் ஊறிப் போய் கிடந்துள்ளது. அதில் ஒரு மாலை ராஜ் கமலின் இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி அவரை நிலை தடுமாற வைத்தது. இருசக்கர வாகனம் ராஜ் கமலின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரில் மோதியுள்ளது. இதில் ராஜ்கமல் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கண்ணெதிரே மகன்  இறந்ததைக் கண்டு அவரை தாய் கதறி அழுதுள்ளார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு சவ ஊர்வலத்தின் போது சாலையில் வீசப்பட்ட மலர் மாலையில் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, நகரின் முக்கிய சாலையில் சவ ஊர்வலம் செல்லும் போது சவத்தின் மீது கிடக்கும் மாலைகளை சாலை நெடுக வீசக்கூடாது என்று வருவாய் துறை காவல் துறை நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு சாலையில் மாலை வீசுவது நிறுத்தப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில் மீண்டும் சாலையில் மாலை பூக்களை வீசி செல்வது தொடர்ந்து வருகிறது.  இந்த விபத்தில் திருமணமாகி நான்கு  மாதமான   ராஜ்கமல் உயிரிழந்த சம்பவம் பண்ருட்டி நகர மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் விவசாய அறுவடை காலங்களில் தானியங்களை சாலைகளில் கொண்டு வந்து சுத்தம் செய்வது அதை காய போடுவது தானியங்கள் மீது வாகனங்கள் ஏறி செல்லாமல் இருப்பதற்காக பெரும் பெரும் பாறை கற்களை சாலை நடுவில் தடுப்பு அறன்களாக வைப்பது இது போன்ற செயல்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. இதில் சாலையில் தடுப்புக்கு வைக்கப்பட்ட கற்கள் மீது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர்.

 

சாலையில் விவசாய விளை பொருட்களை சுத்தம் செய்வது, காய வைப்பது தானியங்களில் வாகனம் செல்லும் போது  இருசக்கர,  நான்கு சக்கர வாகனங்கள் நிலை தடுமாறி வழுக்கிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்களை ஏற்படுத்துவதும் எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. எனவே சாலைகளில் தானியத்தை சுத்தப்படுத்தவோ, காய வைக்கவோ கூடாது என்றும், சாலையில் செல்லும்  சவ ஊர்வலத்தின் போது மலர் மாலைகளை வீசுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் அதை காவல்துறை உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உத்தரவை மீறி நடப்பவர்கள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அப்போதுதான் அப்பாவி பாவிகள் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்