Skip to main content

கடலூர் என்.எல்.சியில் பணியில் உயிரிழந்த தொழிலாளி : உறவினர்கள் போராட்டம்

Published on 13/12/2017 | Edited on 13/12/2017

கடலூர் என்.எல்.சியில் பணியில் உயிரிழந்த தொழிலாளி : உறவினர்கள் போராட்டம் 



கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவன இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தொப்புளிக்குப்பத்தை சேர்ந்த அருந்தவம் சக தொழிலாளிகளுடன் உலர் சாம்பல் உலர்த்தும் பிரிவில் பணியாற்றி கொண்டிருந்தார். நேற்று எதிர்பாராதவிதமாக உலர் சாம்பல் சரக்கு கொட்டும்போது எதிர்பாராதவிதமாக அங்கு பணியாற்றி கொண்டிருந்த அருந்தவம், அமிர்தலட்சுமி, ராணி, மணிமேகலை ஆகியோர் மீது கொட்டியது. உலர் சாம்பல் சூட்டினால் துடிதுடித்தவர்களை என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் அருந்தவமும், அமிர்தலட்சுமியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருந்தவம் இன்று காலை உயிரிழந்தார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் நுழைவாயில் முன்பாக சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் அசோக்குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாநில மகளிர் சங்க செயலாளர் சிலம்புச்செல்வி மற்றும் பாட்டாளி தொழிற் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் தொ.மு.ச மற்றும் சி.ஐ.டி.யு தொழிற் சங்க நிர்வாகிகள், என்.எல்.சி அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், உரிய இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும், உரிய இழப்பீடுகளும் வழங்குவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

- சுந்தரபாண்டியன் 

சார்ந்த செய்திகள்