கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் மகன் சரவணகுமார். பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 24ம் தேதி முதல் காணவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார், சரவணகுமார் காணாமல் போனது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த ஊர் பொதுமக்கள், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வாட்டர் டேங்க் ஆபரேட்டர் பிரகாஷ் மற்றும் அப்பகுதி இளைஞர்களைக் கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி பார்த்த போது, அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், தீயணைப்புத்துறையினருடன் விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கிய ராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டனர்.
அவரது உயிரிழப்பு தொடர்பாக போலீசார் கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரவணகுமார் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.