Skip to main content

போலி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி; கடலூரில் பரபரப்பு!

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

cuddalore virudhachalam fake company created incident 

 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஸ்டேட் பாங்க் அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் ஜெட்வே இந்தியா என்ற டிராவல்ஸ் நிறுவனம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் பணிபுரிவதற்காக பெண்களை மட்டுமே தேர்வு செய்து பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். குவைத் நாட்டில் டிரைவர், பிட்டர், செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதாக கூறி மாவட்டம் முழுவதும் நோட்டீஸ் மூலமாகவும் சுவரொட்டிகள் மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்டது.

 

இதனை நம்பி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்டோர் விருத்தாச்சலத்தில் செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தில் தங்களது கல்வி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்களை கொடுத்துள்ளனர். அதையடுத்து ஒவ்வொரு நபர்களிடமும் தலா 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை பெற்ற டிராவல்ஸ் நிறுவனம் பணம் கட்டியவர்களிடம் போலியான விசா தயாரித்து, அவர்களது செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவ்வாறு அனுப்பப்பட்ட விசாவை ஆன்லைன் மூலமாக பரிசோதித்துப் பார்த்தபோது சரியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், வெளிநாடு செல்ல பணம் கொடுத்தவர்களுக்கு ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 13 தேதிகள் என இரண்டு பிரிவாக விமான டிக்கெட் வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் விசா, டிக்கெட் வாங்குவதற்காக விருத்தாச்சலத்தில் செயல்பட்டு வரும் ஜெட்வே இந்தியா நிறுவன அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது அலுவலகம் பூட்டிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர்களின் நம்பருக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் பணம் கொடுத்த அனைவரும் ஏமாற்றப்பட்டதை அறிந்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிறுவனம் சுமார் 150 பேரிடம் 1 கோடிக்கு மேல் பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

 

cuddalore virudhachalam fake company created incident 

 

இதுகுறித்து டிராவல்ஸ் நிறுவனத்திற்கு வாடகை விட்ட கட்டட உரிமையாளர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, தாமு மற்றும் ராஜீ என்ற இரண்டு நபர்கள் தான் கட்டடத்தை வாடகைக்கு கேட்டதாகவும், முன்தொகையாக 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், மீதமுள்ள முன்தொகை பணமான 20 ஆயிரம் ரூபாயை வாடகை தரும் போது தருவதாகக் கூறியதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களின் ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் கூறினார். பொதுமக்கள் அதிகளவில் புழங்கக்கூடிய இடத்தில் அமைந்துள்ள இந்நிறுவனத்தைப் பற்றி உளவுத்துறையோ, உள்ளூர் காவல்துறையோ, மாவட்ட நிர்வாகமோ தொழிலாளர்கள் அமைப்போ கண்டுகொள்ளாமல் கோட்டை விட்டதன் விளைவாக கோடிக்கணக்கில் ஒரே மாதத்தில் கொள்ளையடித்து விட்டு தப்பித்துச் சென்ற கும்பலால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

cuddalore virudhachalam fake company created incident 

 

அதேபோல் நூதன முறையில் பெண்களை வைத்து ஆசையாகப் பேசி ஒவ்வொரு நபர்களையும் ஏமாற்றி போலியான ஆவணங்கள், போலியான விசாக்கள் கொடுத்து ஒரு மாதத்திற்குள் அனைவரையும் ஏமாற்றிவிட்டுச் சென்ற மோசடி கும்பலை காவல்துறையினர் கண்டறிந்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை மாவட்டம் முழுவதும் லைசென்ஸ் இல்லாமல் இயங்கக்கூடிய டிராவல்ஸ் நிறுவனங்களை கண்டறிந்து தடை செய்ய வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும், வெளிநாட்டுக்கு செல்ல துடிக்கும் இளைஞர்களை ஏமாற்றும் சம்பவம் நடைபெறக் கூடாது எனவும் பாதிக்கப்பட்ட நபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்