கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரில் ஒரு பள்ளி மாணவி பைக்கில் 3 மாணவிகளை உட்காரவைத்து ஓட்டிச் சென்றுள்ளார். அவரது பைக் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு முரண்பாடாக ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மற்றவரின் வாகனத்தை எடுத்து ஓட்டியது, ஹெல்மெட் அணியாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சாலை விதிகளை பின்பற்றாமல் சென்றது உட்பட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பள்ளி பிள்ளைகளிடம் பைக்கை கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று கூறி கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த அந்த மாணவியின் தந்தை அறிவழகனை போலீசார் எச்சரித்துள்ளனர். இதுபோன்று சில நேரங்களில் வழக்கு பதிவு செய்கிறது காவல்துறை. ஆனால் சாலைகளில் டூ வீலர் உயரம் கூட இல்லாத சிறுவர்கள் பள்ளி மாணவ-மாணவிகள் டூவீலரில் மொபட்டில், ஹீரோ ஹோண்டா போன்ற பெரிய வண்டிகளில் மூவர், நால்வர் என உட்கார வைத்துக்கொண்டு சாலைகளில் அதிவேகத்தில் பறக்கிறார். இப்படிப்பட்டவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
மேலும் முறையாக சாலைவிதிகளை பின்பற்றி வாகன ஓட்டி வரும் அவர்கள் மீது அப்படிப்பட்டவர்கள் மோதி அவர்களுக்கும் விபத்தை உருவாக்குகிறார்கள். இப்படிப்பட்ட பிள்ளைகள் விபத்தில் சிக்கி இறந்தும் போயுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம் பெற்றோர்கள்தான். சிறுபிள்ளைகள் டூவீலர் ஓட்டுவதை பெருமையாக நினைப்பது, அதை மற்றவர்களிடம் சுட்டிக்காட்டி பெருமையாகப் பேசுவது சிறு பிள்ளைகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. இதனால் சிறுவர்கள் தங்கள் உறவினர்களுக்கு தெரியாமல் அவர்களது டூவீலர்கள் எடுத்துக்கொண்டு ஜாலியாக ஊரை சுற்றுவது, தங்களது அப்பா அம்மா அவர்களிடம் பொய் சொல்லிவிட்டு இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு சுற்றுகிறார்கள். இதில் சிலர் விபத்தில் உயிரிழக்கிறார்கள். முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனங்களை ஓட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது.