கடலூர் அருகே கரோனா பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் 60-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்கள் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் உள்ள பல்வேறு தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீர் வாய்க்கால்கள், சாக்கடை கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நீக்குவது மற்றும் கரோனா நோய் தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் இந்த தூய்மைப் பணியாளர்கள் கரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு சாதனங்கள், உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆதிவராக செட்டி தெருவில் சாக்கடையை தூர்வாரும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் முக கவசம், கையுறை, பாதுகாப்பு உடை, பாதுகாப்பு காலணிகள் போன்ற பாதுகாப்பு சாதனங்கள் அணியாமல் தூய்மை பணியினை மேற்கொண்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
கரோனோ ஊரங்கு காலத்திலும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியை செய்து வரும் சூழலில் எந்தவித பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல் தூய்மை பணிகளை மேற்கொள்ள குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் நிர்ப்பந்தப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் சிலர் கூறும்போது, " குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்ற எங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை பேரூராட்சி அதிகாரிகள் தருவதில்லை. அதனால் பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல்தான் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்கறை அளிக்க வேண்டும்" என்றனர்.