கடலூர் : விருத்தாசலத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 7 ரவுடிகள், மது விற்ற 5 பேர் உள்ளிட்ட 12 பேரை அதிரடியாக கைது செய்தது காவல்துறை.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் உட்கோட்ட எல்லையில் கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம், ஆலடி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலையங்கள் உள்ளன. இக்காவல் நிலையங்கள் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு குற்ற சம்பங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், ரவுடிகளையும் பிடிப்பதற்காக காவல் துணை கண்காணிப்பாளார் தீபா சத்யன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
அதன் அடிப்படையில் பல்வேறு குற்ற சம்பங்களில் ஈடுபட்டவர்களை தனிப்படை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக குற்ற செயலில் ஈடுப்பட்ட ஏழு பேரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். இதேபோல் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் விருத்தாசலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் கள்ள தனமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் இரண்டு பெண்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஜந்து பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 100- க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் தீபா சத்யன் கூறுகையில், " விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து, கைது செய்தும், குற்ற சம்பவத்தை குறைக்கும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் இனி வரும் காலங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குறற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், பொதுமக்கள் எவ்விதத்திலும், ரவுடிகளை கண்டு அச்சப்பட வேண்டாம் என்றும், மேலும் காவல்துறை என்பது பொதுமக்களுக்காக செயல்படுவதால், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்காக ரவுடிகள் மீது அதிரடி வேட்டை தொடரும்" என்றும் கூறினார்.