கடலூர் மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 100-க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் தனிமை சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதற்காக, வெளிநாடு சென்று திரும்பிய நபர்களின் வீட்டின் முன்பாக தனிமைப்படுத்தல் சுவரொட்டி ஒட்ட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து கடலூர் மாவட்டத்திலுள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய நபர்களின் வீடுகளின் முன்பாக 'வீட்டிற்குள் வெளியாட்கள் செல்ல அனுமதி இல்லை' என்றும் 'தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடு என்பதினால் எந்தச் சூழ்நிலையிலும் வெளியாட்கள் உள்ளே செல்லக்கூடாது. பால், கூரியர், செய்தித்தாள் மற்றும் இதர பொருட்களை வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டும்' என்ற வாசகங்களுடைய சுவரொட்டிகளை அதிகாரிகள் ஒட்டினர்.
மேலும் வெளிநாட்டிலிருந்து திரும்பியோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இன்று (23.03.2020) முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே 144 தடை உத்தரவையடுத்து கடலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைக்க உறுதி செய்யப்படும் என்றும், எனவே தேவையில்லாமல் மக்கள் கடைகளில் அதிக கூட்டம் கூட வேண்டாம் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் குரலொலி தகவல் மூலம் தெரிவித்துள்ளார்.