கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் மாநாட்டிற்குச் சென்ற பலரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானதையடுத்து அம்மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்ககளில் பலர் தனிமைப்படுத்தப்பட்டும், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலிருந்து டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம், பண்ருட்டி, மந்தாரகுப்பம், புவனகிரி என மாவட்டம் முழுவதிலிருந்தும் 31 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதுஅவர்களில் 6 பேர் மட்டும் 28 நாட்கள் கடந்ததால் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.மற்ற 25 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு ரத்தம் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 110- க்கும் மேற்பட்டவர்களும் மருத்துவப் பரிசோதனைகளுக்குட்பட்டு வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் மற்றவர்கள் செல்ல முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு ‘சீல்’ வைத்து பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது.அப்பகுதிகளில் சுகாதாரத் துறை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர அதிகாரிகள் குழு அமைத்துள்ளனர்.
அப்பகுதிகளில் உள்ளவர்கள் வருவாய்த்துறை, நகராட்சியினர், சுகாதாரத்துறையினர் ஆகியோர்களைத் தொடர்புகொள்ளும் வகையில் அவர்களது செல்போன் எண்கள் எழுதி வைக்கப்பட்டு அத்தியாவசியத் தேவைகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.