கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்
இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.