கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 40). லாரி ஓட்டுநரான இவருக்கும் குள்ளஞ்சாவடி அருகில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியைச் சேர்ந்த சித்ராவிற்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தற்போது மூன்று பிள்ளைகளும் உள்ளனர். லாரி ஓட்டுநரான வெங்கடேசன் வேலை நிமித்தமாக பல்வேறு ஊர்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதால் வாரத்தில் சில நாட்கள் வெளியூர்களிலேயே அவரது பயணம் இருக்கும். அதன் பிறகு பணி முடிந்து அவ்வப்போது மனைவி பிள்ளைகளைப் பார்க்க வீட்டுக்கு வந்து செல்வது உண்டு. இந்நிலையில் சித்ரா தனது பிள்ளைகளுடன் தான் பிறந்த ஊரான தோப்புக்கொல்லை பகுதியில் தற்போது தங்கியிருந்துள்ளார்.
கடந்த 26 ஆம் தேதி மனைவி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக வெங்கடேசன் தோப்புக்கொல்லை கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரது மனைவி சித்ரா, வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மதுவை எடுத்து கணவருக்கு கொடுத்துள்ளார். மனைவி கொடுத்த மதுவை குடித்த உடனே திடீரென மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வெங்கடேசன் தற்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் வெங்கடேசன் மது அருந்திய பின் திடீரென மயங்கி விழுந்ததால் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சித்ராவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சித்ரா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சண்முகம் என்ற ஆட்டோ டிரைவருக்கும் சித்ராவிற்கும் நீண்ட நாட்களாக திருமணம் தாண்டிய உறவு இருந்து வந்துள்ளது. இது அவரது கணவர் வெங்கடேசனுக்கு தெரியவந்து அவர் சித்ராவை கண்டித்துள்ளார். அதையும் மீறி சித்ரா சண்முகத்துடன் திருமணம் தாண்டிய உறவைத் தொடர்ந்துள்ளார்.
கணவர் உயிருடன் இருந்தால் தங்களது திருமணம் தாண்டிய உறவைத் தொடர முடியாது என்ற காரணத்தால் கணவனை தீர்த்துக்கட்ட சித்ராவும் அவரது ஆண் நண்பரான சண்முகமும் முடிவு செய்துள்ளனர். அதன்படி வெங்கடேசனுக்கு மது பாட்டிலில் பூச்சி மருந்து கலந்த மதுவை கொடுத்துள்ளார் சித்ரா. வெங்கடேசனை திட்டமிட்டு தீர்த்துக்கட்ட விஷம் கலந்த மது கொடுத்ததை சித்ராவும் அவரது ஆண் நண்பர் சண்முகமும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.