Skip to main content

கிணற்றுக்குள் வெடிகுண்டு வெடித்து விவசாயி பலி!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த படுகளாநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் திருமால். இவர் விழுப்புரம் பணியிடைப் பயிற்சி பள்ளியில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது  சொந்த ஊரில்,  அமைந்துள்ள நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்ற முயற்சியில் பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த  ராமலிங்கம், லட்சுமி, மணி, கோபால் ஆகி கிணறு தோண்டும் தொழிலாளிகள் மூலம் பணி மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் சுமார் ஒரு வார காலமாக கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

 

Cuddalore Farmer issue

 



இந்நிலையில் கிணறு ஆழப்படுத்தும் போது, பாறைகள் இருந்துள்ளது. இதனால் அப்பாறைகளை அகற்றி, ஆழப்படுத்துவதற்காக வெடிமருந்துகளை கொண்டு வெடிக்க செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.  வெடிகுண்டு வெடிப்பதற்கு வயர்கள்  மூலம் கொண்டு வந்து பாதுகாப்பான இடத்தில் இருந்து வெடிப்பதற்கான முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது கோபால் என்பவரை தவிர்த்து மீதமுள்ள மூவரும், கிணற்றிற்கு வெளியே இருந்ததாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் எதிர்பாராத விதமாக, வெடிகுண்டு வெடித்ததில், மண்சரிவு ஏற்பட்டு கிணற்றில் இருந்த கோபால் என்பவரின் மீது மண் சரிந்து, பாறை இடுக்குகளுக்குள் அவர் புதைந்துள்ளார். 

இதனால் செய்வதறியாமல் திகைத்த கிணறு தோண்டும் தொழிலாளிகள் கிணற்றின் உரிமையாளரான காவல் அதிகாரிக்கும், விருத்தாசலம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில்  விருத்தாச்சலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு மண்சரிவு ஏற்பட்ட இடத்தை அகற்றுவதற்கும், கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் கொண்டு,  அப்புறப்படுத்துவதற்கும் உண்டான முயற்சிகளை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரமாக தீயணைப்புத் துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மண் சரிவில் சிக்கிய கோபாலை மீட்பதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டனர்.  இச்செய்தி அக்கம்பக்கம் கிராமங்களில் வேகமாக பரவியதால், ஏராளமானோர் சம்பவ இடத்தில்  குவிந்தனர்.  நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படையினர் பாறை இடுக்குகளுக்குள் சிக்கிக் கொண்டிருந்த கோபாலின் உடலை கண்டறிந்து மீட்டனர். பின்னர் அவரது உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். 

வெடிப்பதற்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்த நிலையில் எவ்வாறு வெடிகுண்டு வெடித்தது என்றும், வெடி மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்றும்,  அதிக சக்தி கொண்ட ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதா என்றும் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 
 

சார்ந்த செய்திகள்