தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதையடுத்து மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து, கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பூதாமூரைச் சேர்ந்த செந்தில் முருகன் (வயது 43) முல்லாதோட்டம் தன்பத்சிங் (வயது 35), தசரத் (வயது 33), இந்திராநகர் பவுல்ராஜ் (வயதை 53) ஆகிய 4 பேரின் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையத் அபுதாஹிர் மேற்பார்வையில் வடலூர் காவல் ஆய்வாளர் வீரமணி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சதக்கத்துல்லா (வயது 42), அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நீலாவதி (வயது 78), வடலூர் பால்கார தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 52), பார்வதிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 28) ஆகியோரது கடைகளுக்கு சீல் வைத்தனர்.
அதேபோல், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் செல்வம் அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர். இதேபோல் வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணி முன்னிலையில், காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு தலைமையிலான காவல்துறையினர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் நடத்திய சோதனையில் நல்லூர் கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்றதாக சிவகுமார், சுப்பிரமணியன், கண்டப்பங்குறிச்சி சீனிவாசன், வேப்பூர் கூட்டுரோட்டில் சரவணன் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். மேலும் 4 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதேபோல் எழுத்தூரில் 2 பேரை ராமநத்தம் காவல்துறையினர் கைது செய்தனர்.
திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, காவல் ஆய்வாளர் அன்னக்கொடி ஆகியோர் திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது சிறுமுளை, செவ்வேரி, கீரனூர், குமாரை, பெருமுளை, நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகள் மற்றும் பலசரக்கு கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்து ஆறுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
பண்ருட்டியில் காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் பிரகாஷ் உள்ளிட்டோர் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், புதுப்பேட்டை, நடுவீரப்பட்டு, காடாம்புலியூர், முத்தாண்டிகுப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அதில் பண்ருட்டியைச் சேர்ந்த முகம்மது (வயது 43), திருவதிகை பரந்தாமன் (வயது 60), காந்தி (வயது 47), கோட்டை ஜானகிராமன் (வயது 72), மேல்பட்டாம்பாக்கம் முருகேசன் (வயது 45), அங்குசெட்டிபாளையம் சாகுல் ஹமீத், சித்திரைச்சாவடி சம்பத் (வயது 37), புதுப்பேட்டை சங்கர் (வயது 48), ராஜேந்திரன் (வயது 42), பக்கிரிபாளையம் மகபூப் (வயது 53), முருகன் (வயது 42), பிரகாஷ் (வயது 27), மேல்மாம்பட்டு சக்கரவர்த்தி (வயது 48) உள்ளிட்ட 15 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் (23/07/2021) மற்றும் நேற்று (24/07/2021) பெட்டிக்கடைகளிலும், மளிகை கடைகளிலும், வீடுகளிலும் பதுக்கி வைத்து போதை பொருட்களை விற்றதாக 50- க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி மற்றும் காவல்துறையினர் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அக்பர் (வயது 47), விருத்தாம்பிகை நகர் ரவி (வயது 40) உள்ளிட்ட 5 பேர் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்துக் கொண்டிருந்ததைப் பிடித்து கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் 12,300 ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.