Skip to main content

என்.எல்.சி. விபத்தில் மேலும் ஒருவர் பலி! நெய்வேலியில் கடையடைப்பு! 

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

cuddalore district NLC boiler incident

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 01- ஆம் தேதி 5- ஆவது அலகிலுள்ள கொதிகலன்  வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

 

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நெய்வேலி நகரியம் 7- ஆவது வட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்ற துணைத் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் நேற்று (03/07/2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதையடுத்து விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே பலியான 6 தொழிலாளர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. நேற்று (03/07/2020) அந்த 6 சடலங்களையும் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்து பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இரண்டு ஆம்புலன்சுகளில் சடலங்கள் ஏற்றப்பட்டு அவரவர்களின் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டன. 

 

cuddalore district NLC boiler incident

 

இதனிடையே உயிரிழந்த தொழிலாளிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நெய்வேலி நகர வியாபார சங்கத்தினர் இன்று நெய்வேலி நகரியத்தில் முழு கடையடைப்பு நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதனடிப்படையில் நேற்று (03/07/2020) நெய்வேலி நகரில் உள்ள மெயின் பஜார், சூப்பர் பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபார சங்கத்தினர் கடைகளை அடைத்ததால் இயல்பு நிலை பாதிப்படைந்தது. 

 

cuddalore district NLC boiler incident

 

இதேபோல் கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் சார்பாக என்.எல்.சியில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வெண்புறா கே.குமார் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்ட தலைவர் அனைத்துப் பொது நலக் கூட்டமைப்பு இணை ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்புராயன், வழக்கறிஞர் திருமார்பன், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பேரவை தர்மராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் மற்றும் பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினர். 

 

 

சார்ந்த செய்திகள்