கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி, நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தலைமையில் தொ.மு.ச. மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் என்.எல்.சி தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் ராகேஷ்குமாரைச் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது; "ஐ.டி.ஐ படிப்பு முடித்தவர்களுக்கு என்.எல்.சி சார்பில் அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் பயிற்சி முடித்த பலர் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1994- ஆம் ஆண்டு முதல் என்.எல்.சி அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அப்ரண்டிஸ் பயிற்சியை முடித்தவர்களில் பலர் தொழிலாளர்களின் வாரிசுகள், என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள், ஊனமுற்றோர் என சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.
கடந்த 2018- ஆம் ஆண்டு டிசம்பர் 5- ஆம் தேதி என்.எல்.சி நிறுவனத்திற்கும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் என்.எல்.சி அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்.எல்.சி தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சுகுமாரன், துணைச் செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் குருநாதன், சி.ஐ.டி.யு. தலைவர் வேல்முருகன், பொதுச் செயலாளர் ஜெயராமன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் மனு அளித்தனர்.