கடலூர் மாவட்ட தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரியில் சென்னையிலிருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விளாங்காடு, கழுதூர், தொண்டங்குறிச்சி, காஞ்சிராங்குளம், சிறுப்பாக்கம், தொழுதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேட்டில் வேலை செய்கிறாக்ரள். அங்கிருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்துள்ளனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 71 பேர், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 31 பேர் உட்பட 611 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அப்படி வந்தவர்களை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் வட்டாட்சியர் கவியரசு, திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வேப்பூர் வட்டாட்சியர் கமலா, விருத்தாசலம் மற்றும் வேப்பூர், திட்டக்குடி ஆகிய தாலுகாக்களில் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள் மூலம் இரவு பகல் பாராமல் சென்னையிலிருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி, ராமநத்தம் நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி, வேப்பூர் ஜெயப்பிரியா பள்ளி வளாகம் என பல்வேறு இடங்களில் அவர்கள் அனைவரையும் கொண்டுசென்று இடைவெளிவிட்டு தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
இவர்களில் கொளஞ்சியப்பர் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டு இருந்தவர்கள் 73 பேர் ரத்தம், உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏழு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் 3,796 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 27 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. இதில் 26 நபர்கள் நோயிலிருந்து குணமாகி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஒரே ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், கடலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் ஏற்கனவே செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து வரப்படுகிறது. நேற்று முதல் வெளி மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அவசிய அவசர பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களைக் கூட உள்ளே மக்கள் யாராவது பயணிக்கிறார்களா என்று காவல்துறையினர் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அப்படி மீறி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார். இந்தநிலையில் நாளை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.