Skip to main content

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா! எல்லைகளில் சோதனை தீவிரம்! ஆட்சியர் எச்சரிக்கை!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

cuddalore district


கரோனோ நோய்ப் பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீடிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 531ஆக இருந்தது. ஆனால் நேற்று குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த 48 வயது கணவர், 43 வயது மனைவி, 9 வயது மகன், 4 வயது மகள் என 4 பேர் உட்பட நேற்று ஒரே நாளில் 26 உயர்ந்து 557 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 467 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 88 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

 



கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்குக் கடலூர் மாவட்ட எல்லைகளில் சின்னகங்கணாங்குப்பம், பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுதூர், வேப்பூர், சிறுபாக்கம், மங்கலம்பேட்டை ஆகிய இடங்களில் செக்போஸ்ட் அமைத்து மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. அப்படி வருபவர்களுக்கு அதே இடத்தில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதுடன், கரோனா பரிசோதனைக்கான மாதிரிகளும் எடுக்கப்படுகின்றன.

இ- பாஸ் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கரோனா மாதிரி முடிவுகள் வரும் வரை தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் "கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அலட்சியமாக உள்ளனர். முகக் கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. தவறான தகவல் கொடுத்து இ-பாஸ் பெற்று இங்கு வருகின்றனர். போலியான திருமண அழைப்பிதழ் கூட அச்சடித்துக் கொடுத்து வருகின்றனர். இ-பாஸ் பெற்று வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், பரிசோதனை செய்து கொள்ளவும் முன் வருவதிவில்லை.  

கிராமப்புற பகுதிகள் வழியாக ஊருக்குச் சென்று விடுகின்றனர். அவர்கள் அரசை ஏமாற்றுவதாக நினைத்துத் தங்களின் குடும்பத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அவர்களுக்கு ஞானோதயம் வருகிறது. கடலூர் நகரில் 45 வார்டுகளில் ஐந்து வார்டுக்கு ஒரு துணை-கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல் உபாதைகள் யாருக்காவது உள்ளதா என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கிராமப்புறங்களிலும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையிலான குழுவினர் கண்காணித்துத் தகவல்கள் அளிக்கின்றனர். முகக் கவசம் இல்லாமல் வெளியில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்" எனக் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.  
 

 

சார்ந்த செய்திகள்