கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிதம்பரம் அருகேயுள்ள சாமியார்பேட்டை மீனவ கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு வானிலை முன்னெச்சரிக்கை செய்திகள் முறையாகக் கிடைக்கப்பெறுகிறதா எனவும், மீனவர்கள் வானிலை எச்சரிக்கை அறிவிப்புகளை முறையாகப் பின்பற்றுகின்றனரா எனவும் சாமியார்பேட்டை மீன்பிடி இறங்குதளத்தில் மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மீன்வளத்துறையின் மூலம் அவ்வப்போது கொடுக்கப்படும் வானிலை எச்சரிக்கையினை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அப்பகுதி மீனவ மக்களிடம் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சாமியார்பேட்டை மீனவ கிராமத்தில் சுற்றுலாவை மேம்பாடு செய்வது தொடர்பாக தகுதியான இடத்தினை தேர்வு செய்வது குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர், காட்டுமன்னார்கோயில் வட்டம், லால்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணையில் கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சாதாகெண்டை வகை மீன் குஞ்சு வளர்ப்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும், அப்பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சினை மீன் வளர்ப்பு மற்றும் கெண்டை மீன் குஞ்சு பொறிப்பக கட்டுமானப் பணிகள் மற்றும் விரால் மீன் குஞ்சு பொறிப்பக கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
மீன் குஞ்சுகளை இருப்பு செய்து உள்நாட்டு மீன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு விவசாயிகளின் பொருளாதாரத்தினை மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கும்படி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவருடன் வருவாய்த் துறையினர் உள்ளிட்ட மீன்வளத்துறையினர் உடன் இருந்தனர்.