கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூபாய் 25.54 கோடி மதிப்பிலான 33 முடிவுற்ற திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து, ரூபாய் 32.16 கோடி மதிப்பிலான 22 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறை சார்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தலைமைக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, தொலைதூர மருத்துவ சேவையின் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் உடல்நிலை குறித்து காணொளி வாயிலாக முதல்வர் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.