கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள செவ்வேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனேசன்(27). இவர் வருவாய்த் துறையில் கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிவனேசன் மற்றும் அவரது மனைவி சங்கீதா அவர்களது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டின் உள்ளே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். சிவனேசன் தந்தை சண்முகம் மற்றும் தாய் ஆதிலட்சுமி ஆகிய இருவரும் அந்த வீட்டின் வெளிப்பகுதியில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் வீட்டின் பின்பக்கக் கதவின் தாழ்ப்பாளை சத்தம் இல்லாமல் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 4 சவரன் நகை, 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
அதிகாலை சுமார் 3 மணி அளவில் வீட்டு வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த சண்முகம் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அலங்கோலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தன் மகன் மற்றும் மருமகளை எழுப்பி பார்த்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. அதோடு திருட வந்த கொள்ளையர்கள், சிவனேசன் வீட்டில் தீபாவளியை முன்னிட்டு குடும்பத்தினர் சாப்பிடுவதற்காக செய்து வைக்கப்பட்டிருந்த பலகாரங்களையும், வீட்டில் இருந்த ஒரு குடம் தண்ணீரையும் வீட்டுக்கு வெளியே கொண்டு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு புளிய மரத்தின் அடியில் வைத்து சாவகாசமாக தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு தண்ணீரையும் குடித்துவிட்டு சென்றுள்ளனர்.
அதேபோல் சில தினங்களுக்கு முன்பு ஆவினங்குடி அருகில் உள்ள மருதத்தூர் கிராமத்தில் ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் சமைத்து வைத்திருந்த கறிக் குழம்பில் சாதம் போட்டு வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை வீட்டுக்கு வெளியே வீசிச் சென்றுள்ளனர். தற்போதெல்லாம் கொள்ளையடிக்க வரும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் வீட்டில் ருசியான தின்பண்டங்கள் சாப்பாடு இருந்தால் சாப்பிட்டு விட்டு நகை, பணம் ஆகியவற்றை எடுத்துச் செல்கின்றனர்.
பொதுவாக காவல்துறையினர் திருட்டு வழக்குகளில் பூட்டு உடைப்பு, கதவு உடைப்பு ஆகியவற்றை வைத்தே இதில் எந்த கும்பல் ஈடுபட்டிருப்பார்கள் என்று யூகிப்பார்கள். அந்த வகையில் திருட வந்த இடத்தில் சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக திருடிவிட்டுச் சென்றது புதுவித கும்பலா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இப்படிப்பட்ட நூதனக் கொள்ளையர்கள் செய்யும் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.