கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன்(55), மாயகிருஷ்ணன்( 50), எழில் வாணன் (35), ரவி (38) ஆகிய நால்வரும் குள்ளஞ்சாவடி பகுதியில் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை வாங்கிவந்து குடித்துள்ளனர். சாராயம் குடித்த கொஞ்ச நேரத்தில் சந்திரகாசன் வாந்தி எடுத்து பலியாகியுள்ளார். பின்னர் மயங்கி கிடந்த மாயகிருஷ்ணன், எழில்வாணன், ரவி ஆகியோரை அருகிலிருந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் எழில்வாணன், மாயகிருஷ்ணன் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரவி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆணையம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரும் கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில், கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் கள்ளச்சாராயம் விற்றது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
கரோனா தொற்றால் ஊரடங்கு நேரத்தில், அரசின் மதுபானக் கடைகள் மூடி உள்ளதால் பல இடங்களில் குடி பிரியர்கள் சிலர் சேவிங் லோசன், சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை குடித்து உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் சில இளைஞர்கள் ஒன்றாக இணைந்து யூடியூப் மூலம் சாராயம் காய்ச்சுவதை பார்த்து வீடுகளில் குக்கர் மூலம் சாராயம் காய்ச்சி குடித்து வருகிறார்கள். இந்தநிலையில் திங்கட்கிழமையன்று சிதம்பரம் அருகே சி. கொத்தங்குடி கிராமத்தில் நான்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து வீட்டில் குக்கர் மூலம் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த அண்ணாமலைநகர் காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.