நீட் தேர்வை எதிர்த்து கடலூர், விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க கோரியும், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர கோரியும், அரியலூர் அனிதா மறைவிற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளிடம் நீதி கேட்டும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய கோரியும் கடலூர் மாவட்டத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி, புவனகிரி எம்.எல்.ஏ துரை, கி.சரவணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் விஜயசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் குளோப் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்
விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மேற்கு வேட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். நெய்வேலி எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன், மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சுந்தரபாண்டியன்