கடலூர் மாவட்ட ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் சார்பில் கடலூர் திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினடு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை தாங்கிய கடலூர் மாவட்ட ஆட்சியர் வீ.அன்புச்செல்வன் கட்டுரை, ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், தேசிய – மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி, ‘பெண் குழந்தைகளை காப்போம்’ எனும் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்த திட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்க அஞ்சல் அட்டைகளையும் ஆட்சியர் வழங்கினார்.
விழாவில் அவர் பேசும்போது,
“ பெண்கள் கல்வி கற்றால் தான் அவர்களின் சந்ததிக்கு நல்ல அடித்தளமாக இருக்கும். பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். பெண் குழந்தைகள் பிறந்தால் தவறு என்று நினைக்கக்கூடாது.
கடலூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அனைத்து வகையிலும் வளர்ச்சி பெற வேண்டும். பெண் குழந்தைகள் படித்து ஐ.ஏ.எஸ், டாக்டர் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். பெண்கள் நினைத்தால் வீட்டிலும், நாட்டிலும் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
கடந்த 3 ஆண்டுகளில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த 7 ஸ்கேன் மையங்கள் மூடப்பட்டுள்ளன. 362 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தொட்டில் குழந்தை திட்டத்தில் 99 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தை திருமணம் நடந்தால் அது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடமோ, ஆசிரியைகளிடமோ தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்கும் மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கை மூலம் பிறப்பின்படி பெண் குழந்தை பாலின விகிதம் 2015-ஆம் ஆண்டில் 886 ஆக இருந்தது, கடந்த ஆண்டு 929 ஆக அதிகரித்துள்ளது.
செல்போனில் பல நல்ல தகவல்கள் இருக்கிறது. அவற்றை மட்டுமே மாணவிகள் பார்க்க வேண்டும். குப்பைகளை ஒதுக்கிவிட வேண்டும். பெண் குழந்தைகள் நமது மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் “ என்றார்.