கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு, தேர்தலில் சரியான நபர்களை தேர்ந்தெடுப்பது குறித்த சைக்கிள் விழிப்புணர்வு, கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

"இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுக்க உறுதியேற்போம் என்று உறுதியை முழங்கி சென்றனர். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே வாக்காளர்கள் வாக்குச்சாவடியை கண்டு குழப்ப நிலையை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதற்காக மாதிரி வாக்குச் சாவடி ஒன்றை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் 163 பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளது என்றும் இதற்கு நுன் கண்காணிப்பு கருவிகள் மூலம் தொடர்ந்து வாக்குப்பதிவை கண்காணிப்பது, கூடுதலாக தேர்தல் பார்வையாளர்கள் இங்கு அமர்த்தப்படும். வாக்குச்சாவடிகளில் மாலைநேரம் கடந்து வாக்களிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் வாக்காளர்களுக்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு சாய்வு தளம் ,சக்கர நாற்காலி. வாக்களர்களுக்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, வெய்யிலில் அதிகம் நிற்காமல் இருப்பதற்கு பந்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எந்த பயமும் அச்சமும் இல்லாமல் வாக்களிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவருடன் சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, சிதம்பரம் கஸ்தூரிபாய் கம்பனி துணிக்கடையின் உரிமையாளர் முத்துகுமரன் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.