கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (09/04/2022) சிதம்பரம் உட்கோட்ட காவல்துறையினருக்கு மினி மாரத்தான் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் பங்கேற்றார். சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை டி.எஸ்.பி ரமேஷ் ராஜ் தலைமையில் சிதம்பரம் உட்கோட்ட பகுதியிலுள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
அனைவரும் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிபேடிலிருந்து பல்கலைக்கழக வாயிலில் உள்ள ராஜேந்திரன் சிலை வரை சென்று மீண்டும் ஹெலிபேடு அடைந்தனர். மொத்தம் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தானில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் கலந்துகொண்டார். மாரத்தான் செல்லும் வழிகளில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கை தட்டி வரவேற்றனர்.
மாரத்தானில் முதலில் வந்த 10 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நினைவு பரிசாக புத்தகங்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர் காவலர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து சிதம்பரம் காவல்துறை டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நினைவு பரிசாக புத்தகத்தை வழங்கினார்.
"இது காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும் உடலைக் கட்டுக்கோப்பாகவும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதற்காக நடைபெற்றது. இதனை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உட்கோட்ட பிரிவுகளிலும் நடத்தப்படும். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும்" என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் கூறினார்.