கடலூர் வெள்ளி மோட்டான் தெருவில் அமைந்துள்ளது சோலைவாழி மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டிக்கொள்ளும் தாய்மார்கள், தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் பிறந்த ஆண் பிள்ளைகளுக்கு பெண் வேடமிட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வினோத வழிபாடு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடப்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் வேண்டுதல் நிறைவேறிய 50-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு பெண் வேடமிட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடந்தது. அதன்படி பெண் வேடமணிந்த பிள்ளைகளுக்கு அம்மனின் மாங்கல்யத்தை அணிவித்து, குடும்பத்துடன் சிறுவர்முதல் பெரியவர்வரை மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலை வலம் வந்து அம்மனை வழிபட்டனர். அப்போது அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. மூலவர் ஸ்ரீ சோலைவாழி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த வினோத வழிபாடு 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.