
கடந்த சில மாதங்களாகத் தெருநாய்களின் தொல்லை கேரளா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் கடந்த மாதம் தெருநாய் கடிக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டவர்களைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இதனால் கேரளாவில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாகச் சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சென்று அவர்களைப் பள்ளி வரை வழியனுப்பி வைத்த சம்பவமும் நடைபெற்றது.
இதற்கிடையே தமிழகத்திலும் அடிக்கடி சிறுவர்களை நாய் கடித்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிப்பது தொடர்கதையாகி வந்தது. இதனால் தெருநாய்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அரசுக்குப் பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், இன்று ஆரணி அருகே மேல்சீசமங்கலம் கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் சிறுவன் உட்பட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.