கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன். 43 வயதாகும் இவர் அதிமுக வார்டு செயலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம்(27.7.2024) இரவு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருப்பணாம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கோவில் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு நேற்று காலை வீடு திரும்பியுள்ளார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த பத்மநாதன் மீது மர்ம கும்பல் காரை மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி பத்மநாதன் கீழே விழுந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், பத்மநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. புதுச்சேரி மாநில எல்லைப் பகுதியான திருப்பணாம்பாக்கம் என்ற இடத்தில் பத்மநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கடலூர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் முன்விரோதம் காரணமாக வெட்டியதாக பாகூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பத்மநாதன் கடந்த ஆண்டு பாஸ்கர் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பாஸ்கரின் கொலைக்குப் பழி வாங்க இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி எக்ஸ் வலைதளத்தில், "கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்த கட்சி வார்டு செயலாளர் பத்மநாதன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது மர்மபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். பத்மநாதன் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
திமுக ஆட்சியில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, அரசியல் கட்சியினர் தொடர்ந்து கொலை செய்யப்படும் நிலையில் இதனைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக கணக்குக்கு சில கைதுகளைக் காட்டி, அதனை விளம்பரமும் செய்து, தனது வழக்கமான கண்துடைப்பு நடவடிக்கைகளால் அரசியல் கொலைகளை கடந்துவிட நினைக்கும் திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம். பத்மநாதன் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் துரிதமாகக் கைது செய்து, உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இணையவாசில சிலர் கடலூர் அதிமுக கிளை செயலாளர் கொலையில் சம்பந்தப்பட்டவர் அதிமுக பிரமுகர் தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.சி சம்பத்துடன் அவர் இருக்கும் படத்தை வலைதளத்தில் பதிவு செய்து எடப்பாடி பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.