கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் என்சிசி கடற்படை மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 5 மாவட்டத்தை சேர்ந்த 400 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடலூர் திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் என்சிசி கடற்படை மாணவர்களுக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 7ம் தேதி முதல் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
பயிற்சி முகாம் கமான்டென்ட் லெப்டினன்ட் கர்னல் வினோத்குமார், தமிழ்நாடு கடற்படை பிரிவு 5ம் எண் கமாண்டர் தினகரன், துணை முகாம் கமான்டென்ட் சப்லெப்டினன்ட் பிரேம்குமார், சப்லெப்டினன்ட் பாஸ்டின்ஜெரோம் ஆகியோர் பார்வையில் முகாம் ஒருங்கிணைப்பு கடற்படை அதிகாரிகள் செல்வக்குமார், சதீஷ்குமார், வளனார், ராஜராஜன், ஜெயக்குமார், குகன் ஆகியோர் பயிற்சி மாணவர்களுக்கு அளித்தனர்.
மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி, துடுப்பு படகு பயிற்சி, மாதிரி கப்பல் வடிவமைக்கும் பயிற்சி, ஒரு கப்பலில் இருந்து மற்ற கப்பலுக்கு தொடர்பு கொள்வது குறித்த பயிற்சி, கடற்படையில் பயன்படுத்தப்படும் 14 முடிச்சுக்கள் பயிற்சி, ஆழ்கடல் மூழ்கும் பயிற்சி மற்றும் சமூதாயப்பயிற்சிகளான சுத்தம், சுகாதாரம், தூய்மை இந்தியா, தீயணைப்பு பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்த மாணவர்கள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த துண்ட பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினர். மேலும் ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டது.
நேற்று முன்தினம் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தேசிய மாணவர் படையின் தலைமை கட்டளை அதிகாரி கர்னல் ஜெயச்சந்திரன் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடல் பயிற்சிகளை மாணவர்கள் பரங்கிப்பேட்டை கடல்பகுதியில் மேற்கொண்டனர்.
இந்த முகாமில் 5 மாவட்டங்களை சேர்ந்த 15 பள்ளிகள், மற்றும் 4 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முகாம் இன்றுடன்(16ம் தேதியுடன்) நிறைவடைகிறது.